இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் ஆண்களின் விதைப்பைகள்
பாதிக்கப்பட்டு, விந்தணு உற்பத்தி குறைக்கப்படுவதோடு, நெஞ்செரிச்சல்
அதிகரிக்குமென்றும், தொடைத்தசைகளும் தோலும் பாதிக்கப்படுவதோடு, கால்
நரம்புகளின் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு தசைகளும் பாதிக்கப்படுவதாக
எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில்
பெண் ஒருவர் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்ததால் அவரது கால்கள் பெருமளவு
உணர்விழந்த சம்பவத்தை அடுத்து, இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் நரம்பியல்
பாதிப்பு ஏற்படும் என்பதை தாங்கள் கண்டறிந்துள்ளதாக ஆஸ்திரேலிய
மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது உறவினர் ஒருவர்
வீடு மாற்றுவதற்கு உதவச்சென்ற பெயர் குறிப்பிடப்படாத அந்த பெண், இறுக்கமான
ஜீன்ஸ் அணிந்து பல மணி நேரம் முழங்கால்களை மடக்கி உட்கார்ந்திருக்கிறார்.
அதனால்
அவரது கால்களின் கீழ்ப்பகுதியில் உணர்விழந்துபோன நிலையில் அந்த பெண்
திடீரென மயங்கி விழுந்துவிட ஆபத்து அதிகமானது. அவரது கால்களின் கீழ்ப்பகுதி
பெருமளவு வீங்கியிருந்ததால் அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் கழற்ற முடியாமல் அதை
அவசர அவசரமாக வெட்டி எடுக்க வேணிய அளவுக்கு நிலைமை விபரீதமானது.
அவர்
அணிந்திருந்த இறுக்கமான ஜீன்ஸை வெட்டி எடுத்துவிட்டு அவருக்கு நான்கு
நாட்களுக்கு மருத்துவமனையில் வைத்து நரம்பூசி மூலம் மருந்து செலுத்தப்பட்டு
தொடர் சிகிச்சையளிக்கப்பட்டது.
இரத்த ஓட்டத்தை தடுத்து நரம்புகளை பாதிக்கக்கூடும்
அவர் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து பல மணிநேரம்
அமர்ந்திருந்ததால் அவரது கால்களுக்கான இரத்த ஓட்டம் தடைபட்டு பாதிப்பு
ஏற்பட்டதாகவும், அத்துடன் அவரது கால் தசைகள் மற்றும் நரம்புகளுக்கும் சேதம்
ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.‘ஜர்னல் ஆப் நியூராலஜி,
நியூரோசர்ஜரி மற்றும் சைக்கியாட்ரி’ என்ற மருத்துவ சஞ்சிகையில் இது குறித்த
மருத்துவர்களின் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இறுக்கமான
ஜீன்ஸ் அணிவது உடலுக்கு நல்லதல்ல என்கிற எச்சரிக்கை விடப்படுவது இது முதல்
முறையல்ல. இளம்தலைமுறையினர் மத்தியில் தங்களின் உடல் வனப்பை
வெளிப்படுத்தும் நாகரிக உடையாக இறுக்கமான ஜீன்ஸ் பார்க்கப்பட்டாலும்,
பெரிதும் விரும்பப்பட்டாலும், அது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்கிற
எச்சரிக்கைகள் தொடர்ந்தும் மருத்துவர்களால் விடுக்கப்பட்டு
வந்திருக்கின்றன.
ஏற்கனவே பல
ஆய்வாளர்கள் இறுக்கமான, லொ கட் ஜீன்ஸ்களை அணிபவர்களுக்கு தொடைகளில்
வலியும், எரிச்சலும் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர்.
விதைப்பைகள் பாதிக்கப்பட்டு விந்தணு உற்பத்தி குறையும்
அதிலும் ஆண்கள் இப்படியான இறுக்கமான ஜீன்ஸ்களை
தொடர்ந்து அணிந்தால் அவர்களின் விதைப்பைகளின் அமைப்பே மாறி, திருகப்பட்ட
தோற்றத்தை பெறும் என்று எச்சரிக்கும் மருத்துவர்கள் ஆண்களின் விந்தணு
உற்பத்தியும் இதனால் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கிறார்கள்.
அதனால்
தான் குழந்தை பெற விரும்பும் ஆண்கள் இறுக்கமில்லாத உள்ளாடைகள் மற்றும்
கால் சராய்களை அணியும்படி தாங்கள் பரிந்துரைப்பதாக தெரிவிக்கிறார்
மருத்துவர் சாரா ஜார்விஸ்.
காரணம்
இறுக்கமான உடைகள் அணியும்போது ஆணின் விதைப்பைகள் தொடர்ந்து உடலோடு அழுத்தி
இறுக்கிவைக்கப்படுகின்றன. அது விதைப்பைகளின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்து
விந்தணு உற்பத்தியை பாதிக்கும் என்கிறார் சாரா. எனவே குழந்தை பெற
விரும்பும் ஆண்கள் ஆரோக்கியமான விந்தணு உற்பத்திக்கு உதவும் வகையில்
இறுக்கமான ஜீன்ஸ் அணியாமல், காற்றோட்டமான ஆடைகளை அணியவேண்டும் என்கிறார்
அவர்.
சிறுநீர்ப்பாதைத் தொற்று மற்றும் நெஞ்செரிச்சலை அதிகரிக்கும்
சிறுநீர்ப்பாதையில் தொற்று இருப்பவர்களும் கூட
இறுக்கமான ஜீன்ஸ் அணியக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
காரணம் இறுக்கமான உடைகள் அவர்களின் சிறுநீர்ப்பாதை தொற்றை அதிகரிக்கச்
செய்யும் என்றும் மோசமடையச் செய்யும் என்றும் மருத்துவர்கள் அறிவுரை
கூறுகிறார்கள்.
அதேபோல, நெஞ்செரிச்சல் பிரச்சனை
இருப்பவர்களும் இறுக்கமான ஜீன்ஸ் அணியக்கூடாது என்று மருத்துவர்கள்
கூறுகிறார்கள். காரணம் இறுக்கமான ஜீன்ஸ்கள், அடிவயிற்றில் கூடுதலான
அழுத்தத்தை செலுத்துவதால், வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் மேல்நோக்கி
உந்தப்பட்டு ஏற்கனவே இருக்கும் நெஞ்செரிச்சல் பிரச்சனையை மேலும்
அதிகப்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அதேசமயம்,
இத்தகைய ஆபத்துக்களின் சதவீதத்தை அளவுக்கு அதிகமாக நினைத்து கவலைப்படத்
தேவையில்லை என்றும் கூறுகிறார் மருத்துவர் ஜார்விஸ்.
நல்ல
ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் தங்களின் உடல் வனப்பை காட்ட நாகரிக உடையாக
இறுக்கமான ஜீன்ஸ் அணிய விரும்பும்போது அதில் இருக்கும் ஆபத்தையும்
உணர்ந்திருப்பது அவசியம் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.
Comments
Post a Comment