Skip to main content

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி)
கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு)
கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம்.
கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது...
மற்றபடி கழுதைக்கும், மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை, காலத்தால் மருவியதே!

2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்."

இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்:
ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால், பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும்.

3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு!
தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது.
இப்போது நாம் பயன்படுத்தும் 'பிச்சை' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் 'பரிசு' என்று பொருள். ஏன் தெரியுமா? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்குக் கிடைக்கும் பரிசு ஆகும். அதைப் பெறுவதற்கு அந்தப் புலவன் மன்னனைப் புகழ்ந்து பாடவேண்டும். எவ்வளவு உயர்வாக புகழ்ந்து பாடுகிறானோ அதற்கேற்ப அவனுக்குப் பரிசுகள் கிடைக்கும். இப்படிப் புகழ்ந்து பாடுவது தான் புலவர்களின் 'திறமை' யாகக் கருதப்பட்டது. புலவனின் பாடும் திறம் அதாவது திறமையை அறிந்தே அக்காலத்தில் அவனுக்கு பிச்சை அதாவது பரிசுகளைக் கொடுத்தனர் மன்னர்களும் சிற்றரசர்களும். இதன் அடிப்படையில் தான் இந்தப் பழமொழியும் உண்டானது. காலப்போக்கில் ஒரே ஒரு எழுத்து மாற்றத்தால் அதாவது '' கரத்திற்குப் பதிலாக '' கரத்தைப் போட்டதால் பொருளே மாறிப்போய் ஒரு வரலாற்றுச் செய்தியே அதற்குள் முடக்கப்பட்டு விட்டது. உண்மையான பழமொழி இது தான்:
' பாத்திறம் அறிந்து பிச்சை இடு.'
(பாத்திறம் = பா+திறம் = பாடும் திறமை)


4. "கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருசன்"

தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற பழமொழி இது. இப் பழமொழியின் தாக்கம் பெண்களிடையே மிகுதி என்றால் அது மிகையாகாது.
ஒரு ஊரில் ஒரு கொக்கு இருந்தது. அது ஒரு குறிப்பிட்ட பாறாங்கல்லின் மேல் அமர்ந்து இளைப்பாறிய பின் மலம் கழித்துவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது. இவ்வாறு நாள்தோறும் தன்னை அசிங்கப் படுத்துவதைப் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த கல் ஒருநாள் பொறுமை இழந்து கொக்கிடம் கேட்டது "ஏன் நாள்தோறும் என்மேல் வந்து அமர்ந்து என்னை அசிங்கப் படுத்துகிறாய்?. நான் உனக்கென்ன கெடுதல் செய்தேன்?. சிவனே என்று நான் ஒரு ஓரமாகத் தானே இருக்கிறேன். நீ வேண்டும் என்றே என்னைத் தேடிவந்து என் மேல் அமர்ந்து இளைப்பாறுவதுடன் அசிங்கம் வேறு செய்துவிட்டுப் போகிறாயே? இது ஏன்? உனக்கு இவ்வாறு நடந்து கொள்வதில் குற்ற உணர்ச்சி தோன்றவில்லையா?"

அதற்கு கொக்கு இறுமாப்புடன் பதில் சொன்னது "நீ இயக்கம் இல்லாமல் ஒரே இடத்தில் கிடக்கிறாய். உன்னால் ஒரு பயனும் இல்லை. நான் அங்கிங்கென தன்னிச்சையாய் பறந்து திரிபவன். உன்னை விட உயர்ந்தவன் என்பதால் இதை நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்."

அதைக் கேட்ட கல் கடகட என்று சிரித்தது. பின்னர் சொன்னது "அட முட்டாள் கொக்கே! நான் இயக்கமே இல்லாமல் கிடந்தாலும் இறைவனின் திருமேனி ஆகும் தகுதி பெற்றவன். எப்போதுமே பறந்து கொண்டிருந்தாலும் உனக்கு அந்தத் தகுதி இல்லை. நீ எத்துணை முறை என்னை மாசுபடுத்தினாலும் மழை நீரால் கழுவப்பட்டு மீண்டும் பொலிவுடன் நிற்பவன் நான். அகத்திலும் புறத்திலும் எப்போதும் அழுக்குகளைச் சுமந்து கொண்டு திரிபவன் நீ. இறைவனைப் போல நான் இயக்கமற்று இருக்க இயங்கித் திரிவதால் நீ ஒரு ஆன்மா ஆகிறாய். இயங்கிக் கொண்டிருக்கும் வரையில் தான் நீ ஓர் ஆன்மா. இயக்கம் நின்று விட்டால் எனது நிலையே உனக்கும். இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் என்னை ஏளனம் செய்யமாட்டாய்."

கல் சொன்ன பதிலைக் கேட்டு மெய்உணர்வு பெற்ற கொக்கு கல்லை வணங்கி விட்டு சென்றது.

இந்தக் கதை உணர்த்தும் கருத்து என்ன?. கல் இயங்காத தன்மை உடையது ஆனாலும் அத்தகைய பண்புடையதே நம் இறைவன் ஆகிய தலைவன். பறவை இயங்கிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்டது ஆனாலும் அத்தகைய பண்புடையதே ஆன்மா ஆகும். இதுவே இப்பழமொழியின் கருத்து ஆகும். இந்த ஆன்மா அடிக்கடி இறைவனிடத்தில் தங்கி இளைப்பாறி விட்டுச் செல்வதுடன் என்றும் இறைவனுக்குக் கட்டுப்பட்டது என்னும் உயரிய ஆன்மீகக் கருத்தை உணர்த்துவதே இப்பழமொழியின் நோக்கம் ஆகும். இனி சரியான பழமொழி இது தான்.

"கல் ஆனாலும் கணவன்; புள் ஆனாலும் புருசன்."
(கணவன் = இறைவன்; தலைவன்; புள் = பறவை; புருசன் = ஆன்மா.)

5. ' ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும் '
என்று இந்த பழமொழிக்குப் பொருள் கொண்டு 'ஆமையின்' மேல் ஒரு 'துரதிருஷ்டசாலி' என்னும் பழியைப் போடுகின்றனர் நம் மக்கள்.
உங்களுக்குக் காளானைப் பற்றித் தெரியும். புழுத்துப்போன மரம், மாட்டுச்சாணம், வைக்கோல் முதலான பொருட்களில் இருந்து சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தானாகத் தோன்றும் ஒரு வகைப் பூஞ்சை தான் இது. இருட்டும் ஈரப்பதமும் காளான் தோன்றுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள். எப்போதுமே இருளாகவும் ஈரமாகவும் மக்கிப்போன பழைய மரங்களுடன் இருக்கும் வீட்டில் காளான் இயல்பாகவே தோன்றும். இது போன்ற வீட்டில் குடி இருப்பவர்கள் உடல்நலத்துடன் இருக்க முடியுமா?. முடியவே முடியாது.
ஏனென்றால் இந்தச் சூழ்நிலையில் வசிக்கும் மனிதர்களுக்கு காசநோய், மனநோய், சருமநோய் முதலான பல நோய்கள் தொற்றிக்கொள்ளும். கதிரவனின் ஒளியும் வெப்பமும் இல்லாத வீட்டிற்கு வெளியாட்களும் வர விரும்ப மாட்டார்கள். எனவே இது மாதிரி வீட்டில் வசிப்பவர்கள் கவனிப்பார் யாருமின்றி நோய்வாய்ப்பட்டு மரணத்தைத் தேடிக்கொள்வர். ஆக மொத்தத்தில் காளான் பூத்த இந்த வீடு உருப்படாமலேயே போய்விடும். இதைத்தான் இந்த பழமொழியும் கூறுகிறது. சரியான பழமொழி இது தான்:

' ஆம்பி பூத்த வீடு உருப்படாது.'
(ஆம்பி = காளான்)

இதில் உள்ள தூய தமிழ்ச்சொற்களான 'ஆம்பி பூத்த' என்பன கொச்சைச் சொற்களாக மாறி பின்னர் உருமாறி இறுதியில் மீண்டும் தூய தமிழ் வடிவம் பெற்று இவ்வாறு நிற்கிறது


ஆம்பி பூத்த > ஆமி பூத்த > ஆமெ பூத்த > ஆமெ பூந்த > ஆமை புகுந்த



6. களவும் கற்று மற


அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி செய்யக்கூடாத தவறுகள் பட்டியலில் 'திருட்டு, சூது' ஆகியவை அடங்கும். இந்த இரண்டு தவறுகளும் ஒரு மனிதனை எந்த நிலைக்கு வேண்டுமானாலும் கொண்டுசெல்லும்.
திருட்டு என்பது பிறருக்கு உரிமை உடைய பொருளை அவருக்குத் தெரியாமல் தான் எடுத்துக் கொள்வது ஆகும். சூது என்பது பிறருக்குச் சொந்தமான பொருளை தந்திரத்தால் ஏமாற்றித் தான் கொள்வதாகும். தாயக்கட்டைகளை உருட்டி விளையாடும் இந்த விளையாட்டிற்கு 'சூதாட்டம்' என்று பெயர். இந்த தந்திரமான விளையாட்டின் அடிப்படையில் தானே 'மகாபாரதம்' உருவானது. துரியோதனன் துகில் உரிப்பதற்கும் பாஞ்சாலி சபதம் செய்ததற்கும் அடிப்படையே இந்த விளையாட்டு தானே.
இதைப் பற்றி ' சூது' என்னும் தலைப்பில் பத்து குறள்களில் மிக அருமையாக விளக்கியுள்ளார் திருவள்ளுவர். சூது விளையாடியவனின் நிலை பற்றி ஒரு குறளில் வள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்.

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார் - குறள் எண்: 935.

இங்கே 'கவறு' என்பது 'சூதாடும் கருவியையும்', 'கழகம்' என்பது 'சூதாடும் இடத்தையும்' குறிக்கும். ' சூதாடும் கருவியையும் சூதாடும் இடத்தையும் தம் கைகளையும் நம்பி மேல்சென்றவர்கள் ஒன்றும் இல்லாதவராய் ஆவர்.' என்பதே இக்குறளின் பொருள் ஆகும். சூதாடும் கருவியைக் குறிக்கும் இந்த 'கவறு' என்னும் சொல்லை 'கற்று' என்று பழமொழியில் பிழையாக எழுதியதால் தான் தவறான பொருள்கோளுக்கு வழிவகுத்து விட்டது. களவுத்தொழிலைக் கையால் தான் செய்யவேண்டும். அதேபோல சூது விளையாட்டையும் முழுக்க முழுக்க கைகளால் தான் ஆடவேண்டும். ' இந்த இரண்டையும் கையில் தொடாமல் இரு' என்பதே இப்பழமொழியில் பெரியவர்கள் கூற வரும் அறிவுரை ஆகும். இனி சரியான பழமொழி இது தான்:

' களவும் கவறு மற.'
(கவறு மற = கவறும்+அற; அற - தவிர்)

7. தை பிறந்தால் வழி பிறக்கும்


பழங்காலத்தில் சாலைகளெல்லாம் மண் சாலைகளே!. இப்போது இருப்பது போல் தார் சாலை கிடையாது. அதுவும் இரவில் நன்றாக தெரியவேண்டும் என்று நல்ல வெள்ளை நிற மண் சாலைகள் அமைப்பார்கள். அந்த வெள்ளை நிற மண் சாலைகளும் மார்கழி மாத பனியினால் காணமல் போகும். அதனால் நடைசாரிகள் சாலைகள் கடக்க மிகவும் துன்பப்பட்டனர்.

அதே பனி தை மாதத்தில் சற்று குறைந்து காணப்படும். எனவே தான் தை மாதம் பிறந்தால் பனியினால் மூடப்பட்ட வழி பிறக்கும் என்பதை "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பர். இதனையே உழவர்களுக்கும் பொருந்தும். ஏனெனில், தை மாதம் - அறுவடைக்கு ஏற்ற காலம் எனவே தை பிறந்தால் பொருள் ஈட்ட வழி பிறக்கும்.

8. ஆத்துல ஒரு கால்; சேத்துல ஒரு கால்.
திருத்தம்:
ஆத்துல என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ் வடிவம் அயத்தில் என்பதாகும். அயம் என்னும் சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டெனினும் இங்கு இச்சொல் குதிரையைக் குறிக்கும். சேத்துல என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ் வடிவம் செயத்தில் என்பதாகும். செயம் என்ற சொல் இங்கு பூமி அல்லது நிலத்தைக் குறிக்கும். இவையே இப்பழமொழிக்கான திருத்தங்கள் ஆகும்.
அயத்தில் --> ஆத்தில் ---> ஆத்துல என்றும்

செயத்தில் --> சேத்தில் --> சேத்துல என்றும்



குதிரை ஏற்றம் பயில விரும்பினான் ஒருவன். ஆனால் அவனுக்குக் குதிரை மீது ஏறவே பயம் எங்கே குதிரை அவனை மேலிருந்து கீழே தள்ளிவிடுமோ என்று. ஆனால் அவனுக்கோ கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. அதாவது குதிரையின் மீதும் ஏறவேண்டும்; அதேசமயம் குதிரையும் அவனைத் தள்ளிவிடக்கூடாது. அதற்காக ஒரு தந்திரம் செய்தான். வலதுகாலைத் தூக்கி குதிரையின் மேலே போட்டுவிட்டு இடதுகாலைத் தரையில் ஊன்றிக் கொண்டான். இப்படிச் செய்தால் பாதுகாப்பாகக் குதிரைப்பயணம் செய்யலாம் என்ற நினைப்பு அவனுக்கு. இப்போது குதிரையைப் பின்னால் இருந்து உசுப்பினான். உடனே குதிரை பாய்ந்து ஓடத் துவங்கியது. இதனால் நிலைதடுமாறிக் கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டான்.
அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது " குதிரைமேல் ஒருகாலையும் தரையில் ஒருகாலையும் வைத்துக் கொண்டால்" குதிரைப் பயணமும் செய்ய முடியாது; நடக்கவும் முடியாது என்று. அதாவது ஒரு நேரத்தில் இரண்டு செயல்களில் கவனத்தை வைத்தால் ஒரு செயலும் உருப்படியாய் நடக்காது. இதுவே இப் பழமொழி உணர்த்தவரும் உண்மையான கருத்தாகும்.
சரியான பழமொழி: அயத்தில் ஒரு கால்; செயத்தில் ஒரு கால்.

9. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல


திருத்தம்:
பழமொழியில் வரும் 'பால்' என்ற சொல்லுக்குப் பதிலாக 'பாகு' என்ற சொல் வந்திருக்க வேண்டும். இதுவே திருத்தம் ஆகும். இங்கே பாகு என்பது வெல்லப்பாகினைக் குறிக்கும்.
பழங்களில் பலவகைகள் இருந்தாலும் இனிப்புச் சுவை உடைய பழங்கள் தான் மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப் படுகின்றன. இத்தகைய பழங்களை உண்ணும்போது கைநழுவித் தவறுதலாகக் கீழே ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஆறவைத்திருக்கும் வெல்லப்பாகில் விழுந்துவிட்டால் என்ன ஆகும்?. வெல்லப்பாகானது பால்போல அதிக நீர்த்தன்மை உடையது அல்ல என்பதால் வெளியே தெறிக்காது. மாறாக விழுந்த பழம் வெல்லப்பாகிற்குள் மூழ்கிவிடும். இப்படி மூழ்கிய பழத்தை வெளியே எடுத்தால் அந்தப் பழத்தின் மேல்புறம் முழுவதும் வெல்லப்பாகு ஒட்டியிருக்கும். இப்போது இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் அதன் சுவையைச் சொல்லவும் வேண்டுமோ?. வெல்லப்பாகின் சுவையுடன் பழத்தின் சுவையும் சேர்ந்து நாக்கிற்கு ஒரு இனிய விருந்து அல்லவா கிடைக்கும்!. அத்துடன் வெல்லப்பாகில் புளியம்பழம் விழுந்தாலும் சரி ஆரஞ்சுப் பழச்சுளை விழுந்தாலும் சரி அது வெல்லப்பாகினை பாதிக்காது.

Comments

Post a Comment

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...